உரையாடல் தொடங்கவேண்டும்...
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
நீண்ட நெடிய பேருலகின் வாழ்க்கையில் எல்லா உயிர்களிலுமே பெண்பால் உயிர்கள் முகாமையாகக் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையிலேயே அந்தந்த உயிர் சமூகம் வாழ்ந்து வந்திருக்கின்றது. ஒரு தலைமுறையைப் பெற்று வளர்த்தெடுக்கிற வேலை இயல்பிலேயே பெண்களுக்கு வாய்த்திருப்பதனால் எல்லா உயிரினங்களிலும் இருக்கின்ற பெண்பால் உயிர்களுக்கு அதிகமான கவனம் இருந்திருப்பதாகவே கருதவேண்டி இருக்கிறது.
மாந்த இனத்திலும் இந்த நிலையே தொடர்ந்திருக்கலாம். குழந்தை பெறுகிற பெண்ணைக் கூர்ந்து பார்க்கிற ஒரு சூழல் காலங்காலமாக இருந்திருக்கின்றது. பெண் கருத்தரிப்பதும் பத்து மாதங்கள் தாண்டிக் குழந்தை பெறுவதும் முதலில் வியப்பாகப் பார்க்கப்பட்டிருந்தாலும், காலம் செல்லச் செல்ல அது கூர்ந்து நோக்கப்பட்டதன் விளைவாக அதன் உள்ளே பொதிந்திருக்கின்ற பொருண்மையை மனிதகுலம் உணர்ந்திருக்கும்.
மெல்ல மெல்ல இந்த அண்டவெளிக்கும் மாந்த உயிர்களுக்குமான அல்லது உலகில் இருக்கிற மொத்த உயிர்களுக்குமான தொடர்பை உணர்ந்து அதை நோக்கிய ஒரு பயணத்தை மாந்தன் தொடங்கி இருப்பான். அப்படியான ஒரு வாய்ப்பு வானியலை, அறிவியலை ஒரு கணிதமாக அல்லது ஒரு கணக்கியலாக மாற்றுகின்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கும்..
அதன் விளைவாக இந்த மண்ணிலே பார்க்கின்ற எல்லா உயிர்களோடும், பொருட்களோடும், நிகழ்வுகளோடும் வானின் தன்மையை அல்லது இந்த அண்டத்தின் இயல்பை ஒப்பிட்டு அதை அறிவாக விரித்துத் தன் வழித்தோன்றல்களுக்குக் கற்றுத்தருகின்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும்.
அதில் ஒன்றுதான் பெண்களுக்கும் நிலவுக்குமான தொடர்பு குறித்தான தேடல். நிலவின் தேய்வும் வளர்ச்சியும் இந்த நிலத்தின் மீது, தண்ணீர் மீது. உயிர்களின் மீது, தாவரங்களின் மீது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற தேடலும் மாந்தனுக்கு இயல்பிலேயே தொடங்கி இருக்கின்றது.
அப்படியான ஒரு தேடலின் முடிவில் 30 நாட்களில் நிலவு தேய்ந்து வளர்வதும் அதே நாள் எண்ணிக்கையில் மாந்த இனத்தைப் பெருக்குகின்ற ஒரு பெண்ணின் கருப்பையின் பூப்புச் சுழற்சியும் ஒன்றாக இருப்பதை மாந்தன் கூர்ந்து கவனித்திருக்கக்கூடும். இல்லை இல்லை மதியிடைச் சுழற்சியும் மகளிரது மாதவிடாய்ச் சுழற்சியும் 28 நாட்கள் என நம்புகிறவர்களும் இருக்கிறார்களே. அது எப்படி? அந்தக் கவனிப்பின் ஊடாக நிலவுக்கும் பெண்களுக்குமான ஏதோ ஒரு தொடர்பை, ஒரு பொதுமைப் பண்பை மீண்டும் மீண்டும் தேடி இருக்கக்கூடும்.
அப்படித் தேடிக் கண்டடைந்த ஏராளமான செய்திகளைத் தமிழர்கள் சங்கஇலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்ற செவ்விலக்கியங்களிலே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தென்னன் மெய்ம்மன் அவர்களுடைய இந்த நூல் தொடங்குகின்றது.
சிலருடைய எளிமையான ஒரு கேள்வியை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். "பத்து மாதங்கள் தாய் கருவாகத் தாங்கிப் பிறப்பெடுத்த நாம் 12 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது ஆண்டுக்கு ஒரு முறை பிறந்த நாளைக் கொண்டாடுகிறோமே ஏன்?”. இந்த எளிமையான கேள்வி பல விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது.
உலகில் பல உயிர்த் தொகுதிகளின் இனப்பெருக்கக் காலம் என்பது அந்தத் தொகுதி சார்ந்த ஒட்டுமொத்த உயிர்களிடத்திலும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றது என்பது அறிவியல். எடுத்துக்காட்டாக ஆமைகள், மீன்கள், பறவைகள் போன்ற பல விதமான உயிர்களின் (அறிவியலின் கூறுகளின் படி பழமையான) இனப்பெருக்கக் காலம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள்ளே இருக்கின்றது. பல பறவைகள், ஆமைகள், மீன்கள், பூச்சிகள் வலசை சென்று ஒரு குறிப்பிட்ட காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. அந்த உயிர்களின் கருவுறும் காலம், சினைப்படும் காலம், முட்டையிடும் காலம் குறிப்பிட்ட நாட்களிலேயே அமைகின்றது என்பது வியப்பு.
ஆனால் மனிதனைப் போன்ற பல உயிர்கள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்து கொள்வதற்கான இயல்பைத் தங்கள் உடல் அமைப்பில் பெற்றிருக்கின்றன. மாந்த இனத்தின் வளர்ச்சிப் போக்கில், இந்த இரு வேறு மாறுபாட்டை உணர்ந்து அது குறித்தான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான சிந்தனை பரிணமித்திருக்கலாம். எல்லாவற்றையும் அறிந்து விடுகிற ஆவலில் இருக்கின்ற மனித மனம் இந்தக் கூறுகளையும் பகுத்து அதிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒரு அறிவை விருத்தி செய்திருக்கின்றது.
பெண்ணுக்கும் ஆணுக்கும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்ற தொடர்பின் கண்ணியை ஆழ்ந்து நோக்கி அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகளை வாழ்வியலின் பொதுமைக் கூறுகளுக்குள், நாள்தோறும் பேசுகின்ற அல்லது பாடல்களில் எழுதுகின்ற ஒரு வழக்கத்தைத் தமிழினம் தொடர்ந்து எடுத்து வந்திருக்கின்றது என்பதை இந்த நூலிலே காணக் கிடைக்கிற ஏராளமான சான்றுகளின் வழியாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சான்றுகளைக் கொண்டு ஆசிரியர் ஒரு ஆண்டு என்பதற்கான வரையறுப்பைப் பழந்தமிழர்கள் எப்படிக் கைக்கொண்டிருந்தார்கள் என்கிற முடிவுக்கு வந்து அதை நமக்கு அறிவிக்கிறார்.
தமிழர்கள் பயன்படுத்திய ஆண்டுக் கணக்கும் அதற்கான கூறுகளாக அல்லது கருவிகளாக அவர்கள் பயன்படுத்திய கதிரவன் மற்றும் நிலவு இரண்டின் சுழற்சியும் குறித்தான செய்திகள் செவ்விலக்கியங்கள் முழுமையும் காணக் கிடைக்கின்றன என்று சான்றுகளாகப் பதிவு செய்கிறது நூல்.
தமிழ்நாட்டை விட்டு வெளியே பல இடங்களிலும் கடல் கடந்தும் தங்களது அரசுகளை விரிவு செய்த அல்லது வணிகத் தொடர்பை அதிகப்படுத்திப் பரவலான வணிகத்தை எடுத்துச் சென்ற மன்னர்கள் வருவாயின் பொருட்டுப் பொதுவான ஒரு ஆண்டுக் கணக்கு அல்லது பொதுவான ஒரு ஆண்டுத் தொடக்கத்தைத் தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப்பரப்பு முழுவதற்கும் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
அதற்காக உலகமெங்கும் பலவிதமான வழக்கங்கள் பல விதமான கணக்கீடுகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் தமிழர்களுடைய பெரும் பங்கு ஒரு ஆண்டு என்பதற்கான தொடக்கமும் அந்த ஆண்டினுடைய பன்னிரெண்டு பகுதிகளாக இருக்கின்ற மாதங்களின் தொடக்கமும் முடிவும் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட வேண்டும் என்ற இடத்தை நோக்கி நகர்ந்ததுதான். குறிப்பாகப் பேரரசு உருவாக்கத்தின்போது இந்த ஆண்டு என்பது மிக முகமையான ஒரு வரையறுப்பாகப் பார்க்கப்பட்டிருக்கின்றது.
ஆண்டுக் கணிதம் தொடர்பான அறிவியல் அல்லது பழக்கம் என்பது நாட்களை எண்ணுவதும் ஒரு நாளின் தொடக்கத்தை, ஒரு மாதத்தின் தொடக்கத்தை, ஒரு ஆண்டின் தொடக்கத்தை அதனுடைய முடிவை மிகச் சரியாகப் பேண வேண்டியதன் அவசியத்தையும் அந்தப் பேரரசர்களுக்கு உருவாக்கி இருக்கலாம்.
தொன்று தொட்டுப் பழகிவந்த இலக்கியங்கள் கூறும் செய்திகளிலிருந்து, நிகழ்த்து கலைகளின் கூரான வரைமுறைகளிலிருந்து தான் ஆளும் நிலப்பரப்பை, உலகை ஒரு பெண்ணாகவே பார்க்கும் பட்டறிவை அரசர்கள் பெற்றார்கள். அந்தப் பெண்ணைப் பெருநிலச் செல்வியாக, திருமகளாகப் பேணி நிலமும் நாடும் காவல் செய்தார்கள் என்ற பார்வையை முன்வைக்கின்றது இந்த நூல்.
அப்படியான பெருநிலச் செல்வியின் இயல்பு, பல்வேறு சூழல்களால் அவளிடம் ஏற்படும் மாற்றங்கள் எனப் பலவற்றிற்கான சான்றுகளாக நிறைந்திருக்கிறது நூல். பெண்ணுக்கும் இயற்கைக்குமான நுட்பமான பிணைப்பைச் சுட்டும் இடங்கள் ஆய்வுகளுக்கான புதிய வாயிலைத் திறக்கின்றன. பேராசிரியர்கள் பேசவேண்டும். அறிஞர்கள் உரையாடல்களைத் தொடங்க வேண்டும். இரண்டின் முடிவுகள், விரிப்புகள் தமிழினத்தின் கைகளில் சென்று சேரவேண்டும்.
"அந்தந்த உயிர்களின் மூச்சுக்காற்று, இரத்தவோட்டம், பசியுணர்வு, பாலுணர்வு, பருவப் பூரிப்பு என அனைத்தும் உலக உருண்டையின் தரைக்காற்று, கடற்காற்று. பருவக்காற்று, நீரோட்டம், தேரோட்டம், அவ்வகையில் கிழக்கு மேற்காகப் பாரிப்பு, அதனில் ஒரு வகைப் பூரிப்பு என்று அன்று உணரப்பட்டதை எவராலும் இன்று புரிந்து கொள்ள இயலுமா? புரியும்படி பிறருக்கு எடுத்துச் சொல்ல இயலுமா? மேற்குலக அறிவியல் பார்வை துணை செய்யுமா? தொந்தரவு
செய்யுமா? தமிழ் மரபில் பெருங்கலைகளும் இலக்கியங்களும் முயற்சி செய்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? வெற்றி பெற்றிருக்கின்றன என்றால் ஏற்கலாமா? ஓவியர்களின் மூளைக்குப் புரிந்து கொள்ளும் வலிமை இருக்கும் என்று சொன்னால் நம்ப இயலுமா?” எனப் பலவாறான வினாக்களைச் சான்றுகளின் அடிப்படையில் எழுப்புகின்றது.
இன்றைய மருத்துவ அறிவியல் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி குறித்து எடுத்துரைக்கின்ற முடிவுகள், “ஒரு மாதம் பிறந்த முதல் 12 நாட்களின் நடு நாள் என்பது மகளிர் வாழ்வில் திருத்தகுதி பெற்றுத்தரும் தகுதியுடையது என்று தெரிகிறது. பூப்புச் சுழற்சியும் மாதச் சுழற்சியும் கோள் ஒழுங்காகவும், கோள் நெறியாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறைச் சதுர்த்தியில் மாதம் இனிதே தொடங்கும் போது முதல் 12 நாட்களில் குறிப்பிட்ட மூன்று நாட்கள் அமைந்து விட்டால் 12-ம் நாளில் விளக்கேற்றும் தகுதி பெற்று விடுகிறாள் திருமகள் என்று நம்பப்படுகிறது. முழு நிலவுக்குப் பிறகு வரும் 18 நாட்களை அகவாழ்வுக்குரிய நாட்களாகப் பகுத்துப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதிலும் கடைசி 7 நாட்கள் நோன்பு என்றும், அந்த நோன்பின் நடு நாள் அமாவாசை என்றும், நோன்பு முடியும் போது 3-ம் பிறை மேற்கு வானில் தோன்றும் என்றும் புரியும் படி இலக்கியப் பதிவுகளாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். அமாவாசை நாளில் விளக்கேற்றும் தகுதி திருமகளின் பண்பு என்று இலக்கணப்படுத்தப்பட்டு உள்ளது.” போன்ற நூலின் பல செய்திகளோடு ஒப்பிடப்படும் போது நூல் ஆக்கப்பட்டிருப்பதன் காரணம் தெள்ளெனத் தெரிகின்றது.
பெருந்தொடக்கமொன்றின் தெளிவான புள்ளியாக வெளிவந்திருக்கும் இந்த நூலைத் தொடர்ந்து பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் இது குறித்த விரிவான ஆய்வு நூற்களை வெளியிட வேண்டுமென்பதே என் போன்றோரின் அவா, அதற்கான உரையாடலைத் தமிழ்ச் சான்றோர் தொடங்கி வைக்கவேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.
நன்றி
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்