Friday, 30 August 2024

இணை மறைந்த இரவு

 


இணை மறைந்து

ஏற்பட்ட வெற்றிடத்தை

நினைவுகளைக் குழைத்து

நிறைக்கும் முயற்சியில்

இரவுகளைத் தொலைக்கிறது

முதுமை.

Wednesday, 28 August 2024

அலர்

 



பூவின் இதழ்களில்

பட்டாம்பூச்சியின்

காலடித் தடங்கள்.

 

நொடிப்பொழுதுக் களவு.

 

மலையெங்கும்

அலர் தூற்றிப்

பறக்கின்றன

வண்ணத்துப் பூச்சிகள்

 


Tuesday, 27 August 2024

தீத்திரள்


உளுத்துப்போன
கட்டைகளிலிருந்து
துளிர்த்தெழுகிறோம்.

பட்டுப்போனது
பழங்காலம் என
அச்சம் கொள்கிறாய்.

முருங்கைமர நிலைக்கதவம்
முறிந்து வீழ்தல்;
வழுவல,
கால வகையினானே.

27-08-2023

Saturday, 24 August 2024

வாழை


நேற்றைய வண்டிகளின் பேரிரைச்சல் அடங்கிய, சக்கரங்கள் நெரித்துப் புழுதி கிளம்பி  மரங்களின் இலைகளில் படிந்து அதிகாலைப் பனிமூட்டமாய் மிரட்டும் வடபழனி கோடம்பாக்கம் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். மெட்ரோ பணிகளுக்காகக் புலியூர் அரசுப் பள்ளியின் அருகே முறித்து வீழ்த்தப்பட்ட பெரிய அரசமரத்தின் காய்ந்துபோன தடி ஒன்றின் மேலே எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்திருக்கிறார். அருகே சோற்றுவாளி ஒன்றைத் திறந்தபடி  நாற்பதைத் தாண்டிய ஒருவர்; மகனாக இருக்கலாம்.  சாப்பிடுமாறு சைகை செய்துவிட்டு நகர்ந்து போகிறார்.

இருவருமே  ஒப்பந்தப் பணியாளர்களுக்கான ஆரஞ்சு மற்றும் நீல வண்ணங்களில் சீருடை அணிந்திருக்கிறார்கள்.  இந்த பெரியவருக்கு இங்கு என்ன வேலை? பளு தூக்கும்  இயந்திரங்கள் நகர்ந்து வருகிற போது எதிரே வருகிற வாகனங்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கலாம், எச்சரிக்கை செய்யலாம் இப்படியான பணிகள் இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில் சிக்கலில்லை. 

Friday, 23 August 2024

நினைவுத் திட்டுகள்

 


ஆவணி மாதத்து

வைகறை வானத்தின்

கருப்பு வெள்ளைத்

திட்டுகளாய் நினைவுகள்.

 

வரையப்படாத

கோடுகளுக்கு இடையே

நீலப் பெருவெளி.

 

காகிதத்தில் கவியக்

காத்திருக்கின்றன

சில கவிதைகள்.

 

23-08-2024

Thursday, 22 August 2024

படித்துறை

 


பார்க்கும் போதெல்லாம்
நினைவுகளை மீட்டுத்தரும்
இரட்டைப் படித்துறை,
இப்பொழுது நினைவுகளாய்...

சிதைந்து கிடக்கிறது
தெப்பக் குளம்.

Tuesday, 20 August 2024

பூட்டவிழ்கும் மனப்பெட்டகம்


 

பரண் மேல்

பூட்டவிழ்த்துத்

தானே திறக்கின்றது

ஊர் மறந்த மனிதனின்

மனப்பெட்டகம்.


அதிலிருந்து

விழுந்து நொறுங்கி

காகிதத்தில் வழிந்தோடும்

நினைவுகளின் மொழியாற்றில்,

நம்மை உள்ளிழுக்கும்

காலச்சுழிகள்.


20-08-2024

Monday, 12 August 2024

வெண்சர்க்கரை தீது



 . ==================

' வெண்சர்க்கரை தீது
. (வஞ்சிப்பா)
. ==================
மூடுபனிபோல் தூள்காட்டுமவ்/
வேடுபறியா டுபரிநிறத்துக/
ளோடுயினியா துமருந்திநற்/
கேடடையுமோ ருடலங்கொளீரென/
கோடைதனிலா சையொடுகுளித்/
தாடுமொருகா கமெனப்பெரு/
மேடைதனிலோ சையொடுமுடை/
வாராடையெ னவோர்கவிதை/
பின்ஊர்/
திரும்பிச் செல்கை யிலேகடைத் தெருவில்/
விரும்பி யுண்பார் திருநெல் லைக்களியே/
சிராப்பள்ளி ப.மாதேவன்
13-02-2020
==============
எளிய வடிவம்

Sunday, 11 August 2024

காதல் கவிதை


கள்ளியின் பூக்களையும்
ரோசாவின் முட்களையும்
பாடும்
கவிதைகள் மேல்
காதல் கொள்கிறேன்

Friday, 9 August 2024

காலச் சுனை



ப்பொழுது தான் ஒடித்துத் தோலுரிக்கப்பட்ட வாகைக்குச்சி ஒன்று வீட்டின் பின்புறமிருந்த களத்தின் தென்மேற்கு மூலையில் மண்ணில் வரையப்பட்ட வட்டத்திற்குள் வழவழவென்று வெண்ணிறமாய்க்  கிடக்கிறது. அருகில் இருந்த வேப்பமரத்திலும் பூவரசமரத்திலும் குரங்குகள் போலே தொங்கிக் கொண்டும் அங்குமிங்கும் ஏறி இறங்கி குச்சியை எடுப்பதற்காகப் போக்குக் காட்டிக்கொண்டும் இருந்தார்கள் நண்பர்கள். அந்த வாகைக் குச்சியையும்  காவல் காத்தாக வேண்டும், அவர்களில் யாரையாவது தொட்டுவிடவும் வேண்டும் என்ற முனைப்பில் நான் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன். பூவரச மரத்தின் ஒல்லியான கொப்பைப் பிடித்ததால் சறுக்கி விழுந்த வேலப்பனை சட்டென்று தொட்டுவிட எத்தனிக்கையில்...

ஊமத்தை


ஊமத்தம்பூவில்
தேனுண்டா
என்பதை
வண்டுகளிடம்
கேட்கவேண்டும்

Tuesday, 6 August 2024

மேற்காகுமோ கிழக்கு



மேற்கின் கிழக்கல்ல

நாங்கள் என

தாய்மொழியில் முழங்கிய

விடுதலையின் குரல்வளையே

உடைக்கப்படுகிறது.


மக்கள் நலம் பேணாது

மரணிப்பவர்கள்

கல்லறையில் பெயர்

பொறியாதிருங்கள்.

மரங்கள்


மனிதர்கள் நிறைந்தப்
பெருநகரங்களின்
கட்டிடக் காடுகளில்,

வண்டிகள் நிறைந்தொழுகும்
ஆறுவழிச் சாலைகளில்,

இளைப்பாறுவதற்கு;

நினைவுகளில் முளைக்கும்
மரங்கள் மட்டுமே
மிச்சமிருக்கின்றன.

Thursday, 1 August 2024

அறிவு

 


பூக்களின் முகவரி,

மணம் என்றது மூக்கு

நிறம் என்றன கண்கள்.


இருளில் என்ன செய்வாய்?

என்றது மூக்கு.

தொலைவை எப்படிக் கடப்பாய்?

என்றன கண்கள்.


சாறெடுத்துக்

குப்பியில் அடைத்துப்

பத்திரப்படுத்து

என்றது மனம்.


வெற்றுக் குடுவையில்

வேதிப்பொருட்கள் சேர்த்து

மல்லிகையைப்

பெற்றுச் சிரித்தது அறிவு.