இன்று கடினமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் பெரும்பாலானோருக்கு, நினைக்கும் போது மன மகிழ்ச்சியைத் தரும் இனிமையான பொழுதுகள் கடந்த காலத்தில் உண்டு.
இன்று வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு மறக்க முடியாத கடினமான பொழுதுகள் கடந்த காலத்தில் உண்டு.
மன மகிழ்ச்சி என்பது நினைவின் அடுக்குப் பாறைகளுக்கிடையே கசியும் நீர். அது கசிந்துருகி கண்களில் திவலையாய்த் திரளும். அன்பின் ஈரம் கன்னக் கதுப்புகளில் படரும்.
அப்படியான பல காட்சிப் படிமங்களை, சொற்கோவைகளைச் சுமந்து நிற்கிறது மெய்யழகன் திரைப்படம்.
எனது கவிதைகளில் ஒன்றிரண்டேனும் உங்களுக்குப் பிடித்திருந்தால், என் எழுத்துகளின் நடுவே நீங்கள் ஒரு நொடிப்பொழுதேனும் கண்மூடி உங்களைத் தேடியிருந்தால், கண்டிப்பாக இந்தத் திரைப்படம் உங்களுக்கு ஒரு காட்சி விருந்து தான். திரைப்படம் குறித்து வேறேதும் கூறாமல் நகர்கிறேன். அது ஒரு வேளை உங்கள் அனுபவத்தை மாற்றிவிடலாம்.
கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். அன்பின் உப்பு கன்னக் கதுப்புகளில் படரும் பேரனுபவம் உங்களுக்கு வாய்க்கும். அழுவதற்கு வெட்கப்படாதீர்கள். அது புனைவுகளற்ற அன்பின் வெளிப்பாடு.