"அன்னா தெரியில்லா காம்பவுண்ட் செவுரு.. அது அப்பெல்லாம் இவ்ளோ ஒசரம் கெடையாது." தொடர்பே இல்லாமல் பேசினார் அப்பா. ஆனால் முகத்தில் ஏதோ ஒரு மலர்ச்சி.
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"காரக்குடிக்குப் போகையில இங்க வண்டி ரெம்ப நேரம் நிக்கும். அந்தச் செவத்துக்கு அந்தப் பக்கம் தான் இந்தியன் காப்பி அவுஸ். ஏறிச் சாடிப் போய் தோசையும் காப்பியும் குடிக்காம காரக்குடிக்குப் போவே மாட்டோம். காலேஜுக்குப் போற வரைக்கும் ருசி நாக்குலேயே நிக்கும்."
மதுரை தொடர்வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த வண்டியொன்றின் எதிர்புற இருக்கையில் அமர்ந்து அப்பா என்னிடம் இதைச் சொன்னபோது எனக்கு வியப்பு மேலிட்டது. எல்லா சிற்றூர்களிலுமிருந்த பெரும்பாலான அப்பாக்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் போலும். அவர்கள் வாயால் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, நம் மனதில் உள்ளவற்றைக் கேட்க நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆனால் காலம் அதற்குள் எமக்கிடையேயான தொலைவை அதிகரித்திருந்தது. உற்பத்திப் பொருளாதாரமான வேளாண்மையை விட்டுவிட்டு மாத ஊதியத்திற்கு மாறியதன் விளைவு சொந்த மண்ணை, மக்களை இழக்கவேண்டியிருந்தது.
பொங்கல், தீபாவளி போன்ற விழாக்களின் போது கிடைக்கும் குறுகிய கால நெருக்கத்தில் ஊர் குறித்து உறவுகள் குறித்து அரசியல் குறித்து அவருடைய கல்லூரி வாழ்க்கை குறித்து என அப்பாவுடன் நிறைய உரையாடல்கள் நிகழ்ந்திருக்கிறன்றன.
ஆனாலும், பக்கத்து ஊர் சோதிடர் ஒருவர் சொன்னதை நம்பிவிட்ட அவரது தாய்க்கு, அது தவறென்று மெய்ப்பிக்கத் தன் வாழ்க்கையையே பணயம் வைத்து, தன் மூச்சின் இறுதிவரை வாழ்ந்து காட்டிய அவரிடம் கேட்காமல் விட்டுவிட்டவையே பெரும் பகுதி என எண்ணும் போது மனதுக்குள் ஒரு அயற்சி வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
நல்லவர்கள், எல்லோருக்குமே நல்லவராக இருக்க முடிவதில்லை. கெட்டவர்கள் எப்போதுமே கெட்டவர்களாகவும் இருப்பதில்லை என்ற வாழ்வியல் பாடத்தை, பேசியும் பேசாமலும் உணர்த்திய என் தந்தையின் நினைவுநாள் இன்று.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்