வரலாற்றுப் புதிர்களை விடுவிப்பதென்பது அறிவுக்கு அறைகூவல் விடுக்கின்ற கடினமான பணி. அதிலும், பண்பட்ட, பெருவாழ்வு வாழ்ந்த ஒரு நாகரிகத்தின் சிறந்த குறியீடாக மதிக்கப்படுகின்ற ஒரு இடத்தை, தவறாக அடையாளம் காணப்பட்டு பல ஆண்டுகளாகச் சரியானது என நம்பப்பட்ட ஓர் இடத்தை, மீள அடையாளப்படுத்தும் முயற்சியும் அது சார்ந்த ஆய்வும் மிகக் கடினமானவை.
அவர் திருவனந்தபுரத்தில் அறியப்பட்ட ஒரு சிறுநீரகவியல் மருத்துவர் என்று அறிந்தபோது எனது வியப்புக்கு அளவில்லை. அத்தனை ஆழமான ஈடுபாட்டுடன் கூடிய தேடலுடன் சங்க இலக்கியம் தொடங்கி உலக வரலாற்றைச் சுமக்கும் பல இலக்கியங்களில் மூழ்கி எழுந்தே இந்த ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு அகழாய்வுகளின் தரவுகள், களப்பணிகள் போன்றவற்றின் துணையோடு முந்தைய ஆய்வுகளின் பல செய்திகளை மிக நுட்பமான தருக்கத்தால் மறுக்கிறார். மேலும் ஆய்வைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். எனது வாழ்த்து அவருக்கு என்றும் உரித்தாகட்டும்.
நூல் கீழ் வருமாறு பகுக்கப்பட்டுள்ளது.
- முசிரிசு குறித்துக் கிடைத்துள்ள தரவுகள்.
- பட்டணம் - கொடுங்கல்லூரை முசிரிசு என்று அடையாளப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.
- எரித்திரியன் கடலின் பெரிப்பிளசில் விவரிக்கப்பட்டுள்ள முசிரிசு மற்றும் அருகிலுள்ள துறைமுகங்களை அடையாளம் காணுதல்.
- முசிரிசு Muziris
- நெல்சிண்டா மற்றும் பேகேர்/பேரேஸ் Nelcynda and Bacare/Barace.
- அடர் சிவப்பு மலை, பராலியா மாவட்டம், பாலிடா. Paralia District, Balita
- கொமரி, கொல்கெ, கடற்கரை நாடு, அர்காரு மற்றும் பலேசிமுண்டு. Comari, Colchi, Coast Country, Argaru,and Palaesimundu
- டிண்டிசு Tyndis
- நௌரா. Naura
- லிமிரிகெ Limyrike
- கருவூர் - சங்ககால சேரர்களின் தலைநகரம்
பண்டைய முசிரிசின் தற்போதைய இடம் தெரியவில்லை. கடந்த காலத்தில், முசிரிசில் வணிகம் குறைந்து, நகரம் அதன் நிலையை இழந்ததாகவும், இந்த இடத்தின் இருப்பிடத்தை உலகம் மறந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது. முசிரிசு இப்போது 'மறைந்த நகரம்' என்று கருதப்படுகிறது.
முசிரிசின் தற்போதைய இருப்பிடத்தைக் கண்டறிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களால் கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கேரளாவில் உள்ள பட்டணம் - கொடுங்கலூர் பகுதிதான் பண்டைய முசிரிசின் தற்போதைய இடம் என்ற ஒருவிதமான ஒருமித்த கருத்து கல்வித்துறை வட்டாரங்களிலும் பொது மக்களிடையேயும் உருவாகியுள்ளது. கேரளாவின் கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள பட்டணம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் கடல் வணிகம் தொடர்பான சில குறிப்பிடத்தக்க சான்றுகளை வெளிப்படுத்த முடியும் என்பது இந்த ஒருமித்த கருத்து உருவாக ஒரு முக்கிய காரணமாகும்.
• இண்டிகா, மெகஸ்தனிசு (கிமு 350 - கிமு 290) - Indika, Megasthenes
• எரித்ரியன் கடலின் பெரிப்ளசு, அறியப்படாத எழுத்தாளர் (40 CE - 60 CE) - Periplus of the Erythrean Sea, unknown author
• இயற்கை வரலாறு, பிளினி தி எல்டர் (23 CE - 79 CE) - Natural History, Pliny the Elder
• புவியியல், கிளாடியசு தாலமி (100 CE - 170 CE) - Geography, Claudius Ptolemy
• Tabula Peutingeriana (கிமு 27 - 14 CE)
• முசிரிசு வியன்னா பாப்பிரசு (100 CE-200 CE) - Muziris Vienna Papyrus
• சங்க இலக்கியம் (கிமு 200 - கிபி 200)
• கொச்சின் யூத செப்புத் தகடுகள் (1000 CE) Jewish Copper Plates of Cochin
கிரேக்க வரலாற்றாசிரியர், இனவியலாளர் மற்றும் ஆய்வாளர் மெகஸ்தனிசு (கிமு 350 - கிமு 290) இண்டிகா என்ற தனது படைப்பில் இந்தியாவைப் பற்றி விவரித்திருக்கிறார். இண்டிகா ஒரு மறைந்து போன படைப்பாகும், ஆனால் பிற்கால ஆசிரியர்களின் படைப்புகளில் எடுத்தாளப்பட்டிருந்த குறிப்புகளிலிருந்து ஓரளவுக்கு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது.
மெகஸ்தனிசு, செலூகசு 1 நிகேட்டரிடம் பணிபுரிந்த கிரேக்க அரசியல் அறிஞர் ஆவார். அவர் அராச்சோசியாவிலிருந்து இந்தியாவின் பாடலிபுத்திரம் வரை பயணம் செய்தார். இண்டிகாவில், ஒரு மன்னரால் ஆளப்படும் 'ஆட்டோமெலா' என்ற சிறந்த வணிக மையத்தை விவரித்திருக்கிறார். ஆட்டோமேலாவை ஒட்டிய பகுதிகள் சார்மே (Charmae) (சேர) அரசர் மற்றும் பாண்டே (Pandae) (பாண்டியர்) ஆகியோரால் ஆளப்பட்டதாக விவரிக்கின்றார். சேர மற்றும் பாண்டியர் பெயர்களைக் கொண்ட, ஏறத்தாழ அவற்றின் ஒலிபெயர்ப்பு வடிவங்களுக்கு மிக நெருக்கமான, இந்தியாவைச் சாராத தொடக்ககாலச் சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.
தாலமி
(100
CE - 170 CE) தனது கிரேக்க நூலான புவியியல் புத்தகத்தில் முசிரிசைக்
குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தைய அறியப்பட்ட உலகின் உள்நாட்டு நகரங்கள், சந்தைகள், ஆறுகளின் தோற்றம் மற்றும் போக்கு, மலைத்தொடர்கள் போன்றவற்றின் மிக விரிவான விளக்கத்தை இந்த நூல் தருகின்றது.
ஒரு இடத்தைக் குறிக்க கிடைவரை (Latitude) மற்றும் நெடுவரை
(Longitude) முறையைப்
பயன்படுத்திய உலகின் முன்னோடிகளில் இவரும் ஒருவர். இந்நூலில் முசிரிசு லிமிரிகெ (Limyrike) நாட்டைச் சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எரித்ரியன் கடலின் பெரிப்ளசு நூலில் மீண்டும்
இணைக்கப்பட்ட பல இடப் பெயர்கள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தாலமியின் புவியியலில்,
சற்று மாறுபட்ட வடிவங்களில் இருந்தாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு உறுதி
செய்யப்பட்டன. இது போன்ற, நூலெங்கும் காணக்கிடைக்கும்
பல செய்திகள் ஒரு பால் கோடாத ஆசிரியரது ஆய்வை எடுத்தியம்புகின்றன.
முசிரிசின்
கருப்பு மிளகு உலகப்புகழ் பெற்றது. எகிப்தில் உள்ள பெரெனிகே (Berenike) என்ற துறைமுகத்தில் நடைபெற்ற தொல்பொருள்
ஆய்வுகளில் ஏராளமான மிளகு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை
தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கலாம். எனில், பண்டைய முசிரிசின் தற்போதைய இடத்தில் அகழ்வாய்வு கருப்பு மிளகு ஏற்றுமதி
தொடர்பான குறிப்பிடத்தக்க தரவுகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் பட்டணம் அல்லது
கொடுங்கல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு கருப்பு மிளகு
கிடைக்கவில்லை. மிளகு சேமிப்பு இடங்கள் மற்றும் கொள்கலன்கள் இதுவரை தோண்டி
எடுக்கப்படவுமில்லை.
பட்டணம் - கொடுங்கல்லூர் அகழாய்வில் மிளகு ஏன் கிடைக்கவில்லை என்று அறிஞர்கள் கேட்கவே இல்லை என்பது வியப்புக்குரியது என்று எழுதும் ஆசிரியர், பட்டணம்-கொடுங்கல்லூரில் மிளகு ஏற்றுமதி தொடர்பான தரவுகள் இல்லாததால், இந்த இடத்தை பண்டைய முசிரிசு இருந்த இடமாகக் கருதுவது கடினமாக உள்ளது என மொழிகிறார்.
இலக்கியம் மற்றும் அகழாய்வுத் தளங்களில் உள்ள விளக்கங்களுக்கிடையே உள்ள பொருத்தமின்மை
பட்டணத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் கடல்சார் வணிக
நடவடிக்கை மற்றும் உரோம் உடனானத் தொடர்புகளைக் குறிக்கும் சான்றுகளை
வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், தொல்பொருள் ஆய்வாளர்கள் ஒரு சாத்தியமான துறைமுகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தத் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சான்றுகளில்
பதிவு செய்யப்பட்டுள்ள முசிரிசு பற்றிய விளக்கத்தின் அளவு மற்றும் விவரங்களுடன்
ஒப்பிடும் போது முக்கியத்துவம் பெறவில்லை.
பட்டணம்-கொடுங்கல்லூரைச் சுற்றி பழமையான நகரம் இல்லாதது
முசிரிசின் முன்மொழியப்பட்ட இடம் மற்றும் அதைச்
சுற்றியுள்ள நகர்ப்புற மையங்களுக்குத் தொல்பொருள் சான்றுகளை எதிர்பார்ப்பது
இயற்கையானது. ஆனால், பட்டணம்-கொடுங்கல்லூர் அகழாய்வில் இத்தகைய குடியிருப்புகள் இருந்ததற்கான
குறிப்பிடத்தக்க சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
பண்டைய முசிரிசில் உள்ள கட்டிடங்கள் கட்டிடக்கலையில்
கிரேக்க - உரோமானிய தாக்கங்களைக் கொண்டிருந்திருக்கலாம். அவற்றில் எதிர்பார்க்கப்பட வேண்டிய
ஒரு உறுப்பு 'ரோமன் மொசைக்சு' ஆகும்.
உலகம் முழுவதும் அகழாய்வு செய்யப்பட்ட பல பண்டைய கிரேக்க-ரோமன் கட்டிடங்களின் உட்புற வடிவமைப்பில் மொசைக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இசுரேல், துருக்கி, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பல தொலைவான இடங்களில் அவை தோண்டப்பட்டன. பொதுவாகவே இந்த இடங்கள் அனைத்தும் பொதுஆண்டின் தொடக்கத்தில், முசிரிசும் செயலில் இருந்த காலத்தில் உரோமுடன் கடல் வணிக உறவைக் கொண்டிருந்தன.
பட்டணம் - கொடுங்கல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், பெருமளவு, பெரு மதிப்புள்ள கடல்சார் வணிகம் கொண்ட துறைமுக நகரம் இருந்ததற்கான சான்றுகளை
இன்னும் வெளிப்படுத்தவில்லை. நௌரா, டின்டிச், நெல்சிண்டா, பேகேர்/பரேசு மற்றும் பாலிடா ஆகியவற்றின் அருகிலுள்ள துறைமுகங்களுக்கான
சாத்தியமான இடங்களாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் அனைத்தும் இந்தக் குழப்பமான
வரம்பையே கொண்டுள்ளன.
கொடுங்கல்லூரில் பழங்கால தொல்லியல் கண்டுபிடிப்புகள் இல்லாதது
கொடுங்கல்லூரில் 1945 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் கிபி 13 ஆம் நூற்றாண்டு
அல்லது அதற்குப் பிந்தைய காலத்தின் தொல்பொருட்களை மட்டுமே கண்டறிந்துள்ளன. இன்றைய
கொடுங்கல்லூரை முசிறியின் செழிப்பான சங்க காலத்துடன் அடையாளப்படுத்துவதற்கு எந்த
தொல்லியல் சான்றும் இல்லை.
இன்றைய பெரியாறு முசிறியை ஒட்டிய ஆறு என தவறான அடையாளம் காட்டப்பட்டுவிட்டது
முசிறி தொடர்பாகச் சங்க இலக்கியங்களில்
பயன்படுத்தப்படும் “சுள்ளியம் பேரியாற்று” என்ற சொற்றொடர் கடந்த காலங்களில் தவறாக விளக்கப்பட்டுள்ளது. இந்தச்
சொற்றொடரில் உள்ள 'பேரியாற்று' என்ற சொல் கேரளாவில் உள்ள பட்டணம் - கொடுங்கல்லூர்
அருகே உள்ள இன்றைய பெரியாறு (பெரியார்) ஆற்றுடன்
தவறாகச் சமன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்ச் சங்கப் புலவர், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், முசிறி/முசிறி சுள்ளி ஆற்றின் கரையில் அமைந்திருப்பதாக விவரித்தார். பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சொக்கம்பட்டி மலையில் இருந்து தோன்றி மேற்கு நோக்கிப் பாய்ந்து, பட்டணம் - கொடுங்கல்லூர் அருகே அரபிக்கடலில் சேரும்.
சங்க இலக்கியங்களில், தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு ஆறுகள் 'பெரியாறு' என்று அழைக்கப்படுள்ளன. எடுத்துக்காட்டுகள் காவிரி, பெண்ணை.
பரணர் காவிரியை
பெரியாறு என்கிறார்.
“பெண்ணையம் பேரியாற்று”
சூடோசுடோமோசை Muciṟi என்று தவறாகப் புரிந்துகொள்வது - முக ஒழுங்கின்மை
கிளாடியசு தாலமி தனது புவியியல் படைப்பில் சூடோசுடோமோசு (Ψευδοστόμου) ஆற்றின் முகப்புக்கு
அருகில் முசிரிசு (Μουζιρὶς) அமைந்துள்ளது என்று
கூறினார்.
பட்டணம்- கொடுங்கல்லூர் பகுதிக்கு ஆதரவாக அடிக்கடி மீண்டும் மீண்டும் வரும் ஊகம் ஒன்று; Muziris / Muciṟi என்ற இடத்தின் பெயரை mucciṟi என்ற மலையாளச் சொல்லுடன் சமன்படுத்துகின்றது. Muc ciṟi’ என்பது பிளவு உதடு எனப்படும் முக வளர்ச்சியின் ஒழுங்கின்மையின் பெயர். சில அறிஞர்கள் இந்த சொற்பிறப்பியல் ஆற்றுப் பெயரான 'சூடோசுடோமோசு' பொய் வாய் என்பதுடன் இணைக்க முயற்சிக்கின்றனர்.
சுள்ளி Cuḷḷi - Pseudostomos இன் தவறான அடையாளம்
பாண்டியரின் இருப்பு பட்டணம் அருகே இல்லாதது
நெல்சிண்டா மற்றும் பேகேர்/பரேசு ஆகிய பாண்டிய துறைமுகங்கள் முசிறிக்கு ஒட்டியதாக விவரிக்கப்பட்டிருந்தன. அவை முசிறிக்கும் கொமரிக்கும் (குமரி) இடையில் அமைந்திருந்தன. பாண்டியரின் துறைமுகங்கள் / ஆட்சிச் செல்வாக்கு ஆகியவற்றின் தடயங்கள் இன்றைய பட்டணம் - கொடுங்கல்லூர் பகுதிக்கு அருகாமையில் இருந்தாக இதுவரை விளக்கப்படவில்லை / கண்டுபிடிக்கப்படவில்லை.
பெரியாற்றை ‘கௌர்ணேயா’வுடன் இணைப்பதற்கான சான்று இல்லை.
கௌடில்லியரின் புத்தகமான அர்த்தசாத்திரம், கௌர்ண்யே (चौर्णेय) என்று பெயரிடப்பட்ட மிகவும் மதிப்புமிக்க முத்துகளைக் குறிப்பிடுகிறது, அவை கௌர்ணியிலிருந்து பெறப்பட்டன. முசிறி பற்றிய சில தருக்கங்கள் அர்த்தசாத்திரத்தில் உள்ள
இந்தக் கருத்தை திசை திருப்பி, இன்றைய பெரியாற்றை கௌர்ணாவுடன் இணைக்க முயல்கின்றன.
மூன்று காரணங்களால் இந்த ஊகம் முற்றிலும் தவறானது என்கிறார் ஆசிரியர் ;
•அர்த்தசாத்திரம் கௌர்ணா ஆறு என்று வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இது ஒரு நிலப்பகுதியின் பெயராகக் கூட இருக்கலாம்.
• பழங்காலத்திலிருந்தே, தென்னிந்தியாவில்
தப்ரோபேன் (சிறீலங்கா) மற்றும் பாண்டியநாட்டுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய
பகுதியில் இருந்து முத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அறுவடை செய்யப்பட்டன.
எரித்ரியன் கடலின் பெரிப்ளசின் கூற்றுப்படி, இந்தப் பகுதி குமரி முனைக்குப் பின்னே உள்ளது, அதே வேளையில் முசிறி குமரி முனைக்கு முன்னே அமைந்துள்ளது. இந்தக் கடலோரப் பகுதி கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி
வரை நீண்டிருந்தது. இந்தப் பகுதி இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது, பெரியாறு வடியும்
இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இல்லை.
• கடந்த காலத்திலோ
அல்லது இப்போதும், இன்றைய பெரியாறு ஆற்றிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முத்து அறுவடை
இருந்ததற்கான சான்றுகள் இல்லை.
முசிறிசை ஒட்டியுள்ள துறைமுகங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்கள்
நௌரா, டின்டிசு, பேகேர்/பரேசு, நெல்சிண்டா, பாலிடா போன்ற முசிறியின் அருகிலுள்ள துறைமுகங்களின் தற்போதைய இருப்பிடங்கள்
பற்றிய நடைமுறையில் உள்ள முன்மொழிவுகள், துல்லியமாக அடையாளம் காண்பதில் சிக்கலில் சிக்கியுள்ளன.
பிளினி தி எல்டர் (23-79 CE) முசிரிசை இந்தியாவின் முதன்மை வணிகத்தளம் (Primum Emporium India) என்று பதிவு செய்திருக்கிறார். முசிரிசு எம்போரியம் காக்லோபோத்ரா (சேரபுத்திர) எல்லைக்குள் இருந்ததாகவும், பாண்டிய (பாண்டியன்) பிரதேசத்தை ஒட்டியுள்ளதாகவும் பிளினி விவரித்தார்.
மெகஸ்தனிசு மற்றும் பிளினியின் இந்த இரு வேறுபட்ட குறிப்புகளை ஒன்றாகப் பகுப்பாய்வு செய்யும் போது, 'ஆட்டோமெலா' என்று பெயரிடப்பட்ட இடம் முசிறியுடன் தொடர்புடையது அல்லது முசிறியின் பழைய
பெயர் என்று முடிவு செய்யலாம்.
அதே நாட்டைச் சேர்ந்த முசிரிசில், அரேபியாவிலிருந்தும் கிரேக்கர்களிடமிருந்தும் சரக்குகளுடன் அனுப்பப்பட்ட கப்பல்கள், ஏராளமாக உள்ளன; இது ஒரு ஆற்றின் அருகே, டிண்டிசிலிருந்து ஆறு மற்றும் கடல் வழியாக 500 சுடேடியா தொலைவில் உள்ளது, மேலும் கரையிலிருந்து ஆற்றின் மேல் 20 சுடேடியா தொலைவில் உள்ளது. நெல்சிண்டா முசிரிஸிலிருந்து ஆறு மற்றும் கடல் வழியாக சுமார் 500 சுடேடியாக்கள் தொலைவில் உள்ளது, மேலும் இது பாண்டியனின் மற்றொரு பேரரசு ஆகும்.
ஆய்வில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட தாலமியின் புவியியல் நூலில் காணப்படும் நகரங்களின் பட்டியல்.
Limyrike - லிமிரிகெ
Tyndis, a city - 116°, 14 deg * 30 deg, Bramagara- 116 deg * 45' 14 deg * 20', Kalaikarias- 116 deg * 40 14, Mouziris, an emporium -117°, 14°, The mouth of the river Pseudostomos - 117° 20', 14°, Podoperoura -117°, 40', 14 15', Semne- 118 deg 14 deg * 20', Koreoura - 118 deg * 40' 140 * 20', Bakarei - 119 deg * 30 14 deg * 30 deg, Mouth of the river Baris - 120°, 14 deg * 20'
Country of the Aioi - ஆய் நாடு
Melkynda - 120° 20', 14° 20' ,Elangkon, a mart-120° 40', 14°, Kottiara, the metropolis-121, 14°, Bammala-121° 20', 14° 15', Komaria, a. cape and town - 121 ο 45', 13° 30'
Country of the Kareoi
Sósikourai - 122°, 14°30', Kolkhoi, an emporium-123°, 15°, Mouth of the river Solen-124°, 14°40'
Land of Pandion பாண்டிநாடு
In the Orgalic Gulf, Cape Kory, called also Kalligikon - 125° 40', 12° 20', Argeirou, a town - 125° 15', 14° 30', Salour, a mart-125° 20' 15° 30" 4
Rivers ஆறுகள்
'Sources of the Pseudostomos from the
Bettigo range-123°, 210
The
point where it turns - 118° 30', 17° 15'
Sources of the river Baris in the Bettigo
range-127°, 26° 30'
Sources of the River Solen in the Bettigo range - 127°, 20° 30's
"மிகவும் போற்றப்படும் ஆட்டோமேலா, ஐந்து ஆறுகள் கடலில் கலக்கும் கடற்கரையில் அமைந்திருக்கின்றது, இது ஒரு மிகச் சிறந்த வணிகத் தளமாகும். அதனுடைய அரசன் 1,600 யானைகள், 150,000 ஆட்கள் மற்றும் 5,000 குதிரைப்படைகளின் தலைவன்.
சார்மேயின் (சேர) மிக ஏழை மன்னருக்குக் கூட அறுபது
யானைகள் உள்ளன, இல்லையெனில் அவரது
படை மதிப்புப் பெறாது.
அடுத்து, இந்தியாவில் பெண்களால் ஆளப்படும் ஒரே இனமான பாண்டே (பாண்டியர்கள்) இருக்கிறார்கள்.
தாலமி விவரித்த முசிறிக்கு அருகே உள்ள ஆறுகள்.
இரண்டாம் நூற்றாண்டில், தாலமி தென்னிந்தியாவில் 'மவுண்ட் பெட்டிகோ' என்ற மலைத்தொடரை பதிவு செய்திருக்கின்றார். மூன்று ஆறுகள் - சூடோசுடோமோசு (Ψευδοστόμου), பாரிசு (Βάριος), மற்றும் சோலன் (Σωλήνος) ஆகியவை பெட்டிகோ (Βηττιγώ) மலையிலிருந்து தோன்றியதாக விவரித்தார். இந்த சூடோசுடோமோசு ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் முசிரிசு அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிருந்து தொடங்குகின்ற, சுள்ளியாற்றைக் கண்டடைவதற்கான நூலாசிரியரின் தேடல், எப்படி குமரி மாவட்டத்தின் முஞ்சிறை நகரைச் சென்றடைந்தது? என்பதுதான் நூலெங்கும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.
தேடியெடுக்கப்பெற்ற தரவுகளும், அவற்றைச் சான்றாக்குவதற்கான நேர்மையான தருக்கமும் பல இடங்களில் வியப்பின் எல்லைக்கே நம்மை இட்டுச் செல்கின்றன. அன்றியும் ஆய்வு நோக்கைத் திருத்திக்கொள்வதற்கும் ஏதுவாகின்றன. ஆசிரியரது பல தருக்கங்கள், அவற்றின் மீதான ஏற்பு மற்றும் மறுப்புத் தொடர் உரையாடல்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.
ஆர்கரு சொற்பிறப்பியல்
பெரிப்ளஸில் உள்ள Aργάλου என்ற கிரேக்கப்
பெயர் பொதுவாக "Argaru' என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் 'Argalu' என்பது சரியான, சற்று சிறந்த ஒலிபெயர்ப்பாகும்.
ஆர்காரு/ஆர்கலு என்ற இடப் பெயரின் பொருள் என்ன?
அறுகை/அருவை என்றால் துணி. 'ஊர்' (மார்ட்/ür) என்ற சொல்லுக்கு கிராமம்/நகரம்/நகரம்/இடம் என்று பொருள்." எனில், அர்கலு (Ἀργάλου) என்பது அருகன்குளம் (அ) என்ற இடத்தின் கிரேக்க ஒலிபெயர்ப்பாகவும் கருதப்படலாம். அப்படியானால், Argalu என்பது அசல் ஒலிபெயர்ப்பாகவும், Argaru என்பது பிற்கால எழுத்துப் பிழையாகவும் இருக்கலாம்.
Aruvai, Arukai (Tamil for Cloth)
↓
அறுகை ஊர் - அறுகையூர் (சாத்தியமான சங்க கால இடப்பெயர்)
அர்காரு (கிரேக்க ஒலிபெயர்ப்பு)
ஆர்காரிடிக் (அர்காரு தொடர்பானது)
அர்காருவை உறையூர் என்று தவறாக அடையாளம் காட்டுதல் - Misidentification of Argaru as Uraiyur
உறையூரிலிருந்து சோழர்களால் 'ஆர்காரிட்டிக்' துணி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது என்று அறிஞர் வட்டாரங்களில் பரவலாகத் தவறான கருத்து உள்ளது. அர்காரு என்பது உறையூரின் ஒலிபெயர்ப்பாக இருக்கலாம் என்ற தவறான புரிதலின் காரணமாக இந்தக் கருத்து உருவாகி இருக்கலாம்.
ஆர்கரிட்டிக் ஏற்றுமதி செய்யப்பட்ட கடற்கரை நாடு (αἰγιαλός) சோழர்களுடனோ உறையூருக்கோ அல்லது சோழர் பகுதியாகவோ எந்த விதத்திலும் தொடர்பானதில்லை என்பதால் இது ஏற்புடையதன்று.
பெரிப்ளஸ் உரையை கவனமாகப் படிப்பது, கடலோர நாடு என்பது வடக்கில் வைகை ஆறு (ராமேசுவரம்) மற்றும் தெற்கில் கிழக்கு தாம்ரபரணி ஆறு (கொற்கை) ஆகியவற்றுக்கு இடையே பரவியிருந்தது என்பதைப்
புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. சங்ககால சோழர்களின் களம் இப்பகுதியின் வடக்கே தனியாக இருந்தது. மேலும், பெரிப்ளஸ் கொற்கை (கொல்கெ) பாண்டிய மன்னர்களின் கீழ் இருந்ததாகவும், புவியியல் - கொற்கை (கொல்கொய்) கரோய் மன்னர்களின் கீழ்
இருந்ததாகவும் விவரித்திருக்கின்றன.
ஆர்கரிட்டிக் துணிக்கும் சோழர்களுக்கும் தொடர்புள்ளது
என்றும், அர்காரு என்பது
உறையூர் என்றும் பொதுவாகக் கூறப்படும் தவறான கணிப்புகளை விரைவில் அகற்றிவிடுவது நல்லது.
பலேசிமுண்டோ / டப்ரோபேன்
கடற்கரை நாட்டின் கடற்கரையானது கொற்கையில் இருந்து ராமேசுவரம் வரை
பரவியிருந்தது. கடற்கரை நாட்டில் வணிக நடைமுறைகளை விவரிக்கும்போது, பெரிப்ளஸ் இந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து தனியான ஒரு தீவை
விவரிக்கிறார். ஒரே தீவின் இரண்டு வெவ்வேறு பெயர்கள் - 'பலேசிமுண்டு' (Παλαισιμούνδου), மற்றும் 'டாப்ரோபேன்' (Ταπροβάνη) என பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வண்ணக்கற்கள், மசிலின்கள், முத்துக்கள் மற்றும்
ஆமை ஓடுகள் போன்றவை பலேசிமுண்டு / தப்ரோபேனில் நடைபெற்ற வணிகத்தின் முக்கிய பொருட்களாக
குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரிப்ளஸில் விவரிக்கப்பட்டுள்ள இந்தத் தீவு, இந்திய
தீபகற்பத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இன்றைய இலங்கை என்பது
வெளிப்படையானது. 'பலேசிமுண்டு' மற்றும் 'தப்ரோபேன்' ஆகியவை சிறீலங்காவின் பண்டைய
பெயர்களின் கிரேக்க மொழிபெயர்ப்பாக இருக்கலாம்.
Taprobane - சொற்பிறப்பியல்
கிமு 3 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அசோகரின் பாறைப் பொறிப்புகள் சிறீலங்காவைக் குறிக்க தம்பபன்னி (तम्बपण्णि/Tam-bapaņņi) என பயன்படுத்தின. ஒனேசிக்ரிட்டஸ் (கிமு 360-கிமு 290), ஒரு கிரேக்க வரலாற்றாசிரியர் இந்தியாவின் தெற்கே உள்ள தீவை விவரிக்க Taprobane என்ற பெயரைப் பயன்படுத்தினார்.
அசோகரின் பாறைக் கட்டளைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள "தம்பபன்னி' என்பது "தம்பா' மற்றும் 'பன்னி' என்ற சொற்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுச் சொல்லாகும். 'தம்பா' (तम्बा) என்ற சொல் தாமிரத்தைக் குறிக்கும் பாலி மொழிச் சொல்.
'பண்ணா' என்பது 'பஜ்ஜாதி' என்ற சொல்லின் கடந்த காலப் பகுதி வடிவம். பாலிச் சொல்லான 'பஜ்ஜதி' என்பது சமசுகிருதச் சொல்லான 'பத்யதே' என்பதற்கு இணையானது, 'பட்' (पद) என்ற சொல்லுடன் உள்ளது. பேட் என்ற சொல்லுக்குக்கு பல பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று 'அடைய, பெற'.
தம்பபன்னி என்பது தாமிரத்தைப் பெறக்கூடிய இடமாக விளங்குகிறது. பண்டைய உலகில் தாமிரத்திற்கான முக்கிய ஆதாரமாக இலங்கை இருந்திருக்கலாம். Taprobane தம்பபன்னியின் கிரேக்க ஒலிபெயர்ப்பாக இருக்க வேண்டும். Tambapaņņi (தம்பா = செம்பு, பன்னா = பெறுதல், பாலி மொழி)
தொண்டி எங்கே?
டிண்டிசு மற்றும் டுண்டிசு ஆகியவை சங்க கால நகரமான சேரர்களின் தொண்டியின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். டொன்டி/திண்டிசு என்பது இன்றைய திருவனந்தபுரம்.
பெரிப்ளசில் விவரிக்கப்பட்டுள்ள டிண்டிசு, இன்றைய திருவனந்தபுரத்தின் கடற்கரையை ஒத்துள்ளது. புவியியலில் திண்டிசு என அழைக்கப்ப்ட்ட நகரம் கரமனை ஆறு மற்றும் கிள்ளி ஆற்றின் கரையில் உள்ள இன்றைய திருவனந்தபுரம் நகரமாகும். இந்த இடத்தின் பெயர் டொண்டியில் இருந்து காந்தளூர் என 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மாறியது. Käntaļür என்ற பெயர் கிபி 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு காந்தளூர் என்ற பெயர் அனந்தபுரம் என மாறியது.
இவை போன்ற பல செய்திகளும், அவற்றின் விளக்கங்களும், சொற்பிறப்பு மற்றும் நிலவியல் அடையாளம் குறித்தான ஏராளமான தரவுகளும் கொண்டு ஓர் ஆய்வுநூலுக்கான சிறந்த அமைப்பு மற்றும் தகுதியுடன் இருக்கின்றது The Discovery Of Muziris.
சேகரிக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் ஓவியங்கள், ஆசிரியரது தருக்கம் மற்றும் அதன் முடிவுகளை விளக்கும் "தரவு கோட்டுப் படங்கள்" (Data line diagram) என மிகச் சிறந்த விளக்கமுறை கொண்ட நூலாக அருமையாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
தமிழறிஞர், மொழியியல் அறிஞர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல் அறிஞர், புவியியல் அறிஞர் போன்ற அறிஞர் பெருமக்கள் இந்த நூலைக் கட்டாயம் படிக்கவேண்டும் என விரும்புகிறேன். நூலின் கருத்துகள் மற்றும் தருக்கங்கள் குறித்தான உரையாடல் வலுவாக நிகழவேண்டும். அது இந்த ஆய்வை மேலும் விரிவடையச் செய்யும் என எதிர்பார்க்கிறேன்.
பண்டைய கொமரியின் அருகேயுள்ள நெல்சிண்டாவில் இன்று வாழும் ஒருவனாக, எம் மண்ணில் செறிந்த அகழாய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றேன். இந்த நூலைப் படிக்கும் அனைவருக்குமே இந்த எண்ணம் எழும் என நம்புகிறேன்.
வருங்காலங்களில் சரியான சான்றுகளும் நேரான தருக்கமும் கொண்டு மறுக்கப்படாதவரை, பண்டைய முசிறி இவர் கூறும் குமரிமாவட்டத்தின் முஞ்சிறையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்,
சிராப்பள்ளி ப.மாதேவன்
15-11-2024
================
ஆசிரியரின் மின்னஞ்சல் dr.anto.g@gmail.com
நூல் : The Discovery Of Muziris
ஆசிரியர் : Dr Anto George
பக்கங்கள் : 206
விலை : 550 உருவா
அமேசானில் நூலைப் பெற : https://amzn.in/d/8ksLXmf
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்