Sunday, 9 March 2025

முல்லைக்குத் தேர்கொடுத்து…

 


பல நூறு செடிகொடிகள் இருக்க பாரி ஏன் முல்லைக்குத் தேர் கொடுத்தான்?

மரஞ் செடி கொடிகள் தாமாக வளரும். வெயிலின் போக்கில் தலை உயர்த்தும் மரங்கள். கதிரவனுக்கு முகம் காட்டி வளைந்து நெளிந்து வளர்ந்து நிற்கும் தென்னைமரங்கள் பல்லாயிரம். தலை உயர உயர தண்டு பருத்து வலு சேர்க்கும் செடிகள்.

கொடி என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய பயிரி ஆகும். பொதுவாகப் பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இக்கொடிகள் வளரும். பெரும்பாலன பற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும். கொடிகள், முறுக்கும் தண்டு, வான்வழி வேர்கள் அல்லது ஒட்டும் வட்டுகளைப் பயன்படுத்தி தங்களைத் தாங்கிக் கொண்டு ஏறுகின்றன இப்படி இறுக்கும் பயிரிகளுக்கு அவை சுற்றிச் செல்லக்கூடிய குறுகிய கொம்புகள் கொண்ட உறுதியான ஆதரவு தேவை. சில கொடிகள், ஒட்டிக்கொள்ள சிறிய வான்வழி வேர்களைப் பயன்படுத்துகின்றன, எனவே அவற்றுக்கு அதிக உதவி தேவையில்லை. பிசின் வட்டுகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் கொடி வகைகளும் உண்டு.

மரங்களில் ஏறும் கொடிகள் காடுகளின் ஓரங்களுக்கு அருகில் அதிக எண்ணிக்கையில் வளரும். பெரும்பாலான கொடிகள் மரங்களின் உச்சிக்கு அருகில் அதிக சூரிய ஒளியைப் பெறவே மரங்களில் மற்றும் கொம்புகளில் ஏறுகின்றன 

காட்டு முல்லை மலைப்பகுதியில் வளரும் கொடியினப் பயிரி வகையாகும். இதன் தண்டுப்பகுதி 13 செ.மீ. வரை பருத்து வளரும் இயல்புடையது. கொடியோ பரந்து அடர்ந்து வளரும் தன்மை உடையது. அருகில் இருக்கும் குற்றுச் செடிகள், மரங்கள் இவற்றில் பற்றிப் படரும் தன்மை கொண்டது. காடும் காடு சார்ந்த இடமும் என அழைக்கப்பட்ட முல்லை நிலத்தில் இவை மிகுதி. அதன் பொருட்டே அந்நிலத்திணைக்கு முல்லை என்ற பெயர் வந்தது என்ற கருதுகோளும் உண்டு. 

மாயோன் மேய காடுறை உலகமும்” எனவும்

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்”- (தொல், பொருள். 104) எனத் தொல்காப்பியம் முல்லையை முதலில் வைத்துப் போற்றுகின்றது. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் முதன்மையாகிய குறிஞ்சியிலிருந்து, கற்பு நிலை என அழைக்கப் பெற்ற மண வாழ்க்கை முறைக்கு மாறிய சமூகச் சூழல் முல்லையில் நிகழ்ந்ததற்கான பல பாடல் தரவுகள் செவ்விலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. 

குறிஞ்சியின் உரிப்பொருளாகிய புணர்தலும் அதன் நிமித்தமும் முல்லையில் களவு எனும் செவ்விலக்கியப் பதிவுகளாகக் கிடக்கின்றன. தலைவன் தலைவிக்கு இடையேயான களவு பெற்றோர் அறியும் போது கற்பு வாழ்க்கையாக மாற்றம் பெறுகின்றது என்பதுவும் தோழி கூற்றுகளாகப் பல பாடல்களில் இருக்கின்றன. இப்படி மாற்றம் பெறும் பல இடங்களில் காட்டு முல்லைப் பூ பெருங் குறியீடாகக் காட்டப்பெறுகின்றது. 

தொழுவத்து

சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை

கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய

ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என்

கூழையுள் வீழ்ந்தன்று-மன்

. . . . .

. . . . .

மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்

கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா

தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ

பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு

ஐயன்மார் எல்லாம் ஒருங்கு - முல்லைக்கலி 107 

ஆயர் மகன் சூடி இருந்த முல்லைப்பூக் கண்ணியை, காளை ஒன்று ஏறு தழுவலின் போது கொம்பால் இழுத்துச் சிதற; அதிலிருந்து உதிர்ந்த முல்லைப் பூக்களில் சில ஆயர் மகளின் கூந்தலில் வந்து விழ, ஏறு தழுவும் திறனும் உரமும் கண்டு அவனிடம் உள்ளம் பறிகொடுத்த அந்தப் பெண்ணும் அந்த முல்லைப் பூக்களை மகிழ்ச்சியோடு கூந்தலில் இறுகச் சூடிக்கொண்டாள். அவள் பெற்றோர் அதைக் கண்டு அவனுக்கே அவளை மணமுடிக்க ஊர்ப் பெரியவர்களோடும் உற்றார் மற்றும் சுற்றத்தோடும் திரண்டனர் என்கிறது மேலே உள்ள பாடல். 

அந்தக் காட்டின் இன்னொரு இடத்திலே; 

புல்லினத்து ஆயர்மகன் சூடி வந்ததோர்
முல்லைஒரு காழுங்கண்ணியும் மெல்லியால்
கூந்தலுட் பெய்து முடித்தேன்மன் தோழியாய்

. . . . . .

. . . . . .

அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்நாய் ஆயின் நமரும்
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன்கண்
வரைப்பின் மணல் தாழப்பெய்து திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்
அல்கலும் சூழ்ந்த வினை.”⁠- முல்லைக் கலி. 115
 

களவொழுக்கத்தில் ஈடுபட்ட ஆயர் மகன் முல்லை மலரால் ஆன தொடையும் கண்ணியுஞ் சூடிக் கொண்டு, தலைவியை நாடி வருகிறான். தலைவியைக் கண்டவுடன் தான் சூடியிருந்த முல்லை மாலையிலிருந்து ஒரு துண்டை அவளிடம் கொடுக்கிறான். அவளும் அகம் மகிழ்ந்து, அதனைத் தன் கூந்தலில் நன்கு முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள். தலையில் பூ இருந்ததை மறந்துபோனாள். 

மாலையில் தலைவியின் நற்றாயும், தந்தையும் வீற்றிருக்கின்றனர். செவிலித் தாய் வெண்ணெய் நீவி முடிப்பதற்கு தலைவியின் முடித்த கூந்தலை அவிழ்க்கின்றாள். காலையில் இறுக்கமாக உள்ளே சூடியிருந்த முல்லை மலர் மாலைத் துண்டு கீழே விழுகின்றது. அதனை எல்லோரும் பார்க்கின்றனர். நெருப்பைக் கையாலே தீண்டியவள் போலச் செவிலி கையைப் பிசைந்துகொண்டு துடித்து நகர்ந்து போய்விடுகிறாள். பூ எப்படி வந்தது? எனக் கேட்கவுமில்லை. தந்தை மருண்டார். நற்றாய் நாணம் கொண்டு வருந்தினாள். தலைவியோ அச்சமுற்று, சந்தனம் பூசி உலர்த்திய கூந்தலை முடித்துக் கொண்டாள். நிலத்தே தாழ்ந்து கிடந்த தனது பூத்தொழில் செய்யப்பட்ட ஆடையைக் கையாலே சரிசெய்து கொண்டாள். தளர்ந்து நடந்து பக்கத்தில் இருந்த காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டாள். 

ஆனால், இங்கே வீட்டில் ஊராரும் சுற்றமும் சேர்ந்து பேசி அவளை அவனுக்கே மனமுடிக்க முடிவு செய்கிறார்கள். அது அவளுக்குத் தெரியாது. 

இதை அறிந்த தோழி அவளைக் கண்டு, அச்சப்படாதே ஆயர் மகன் சூடிய முல்லைக் கண்ணியை நீ உன் கூந்தலில் முடித்துக் கொண்டதால், நீ அவனை விரும்புவதை நம் பெற்றோரும் உற்றாரும் ஊரும் அறிந்து கொண்டார்கள். அவர் எல்லாம் கூடி உன்னை அவனுக்கே மணம் செய்து கொடுக்க முடிவு செய்து மண விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர். முற்றத்தில் மணலைப் பரப்பித் திரையிடுகின்றனர். வந்து பார் என்று கூறி அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றாள் என்கின்றது மேலே உள்ள பாடல். 

பெண்‌ மங்கைப்‌ பருவமடையும் போது இல்வாழ்வுக்கானத் தகுதி பெறுகிறாள் என்பது பண்டைய முல்லை மரபு.‌ அப்‌ பருவத்தில்‌ அவள் தன்‌ வீட்டுத்‌ தோட்டத்தில்‌ ஒரு முல்லைக்கொடியை வைத்து வளர்க்கத்‌ தொடங்குவாள்‌. இவ்வாறு நடப்படும்‌ முல்லை இரண்டு திங்களில்‌ தழைத்து வளர்ந்து அரும்பும்‌. அரும்பியதன்‌ அடையாளம்‌ அம் முல்லைக்கொடியை வளர்த்த பெண்ணும் பருவமடைந்தாள் என்பதை மற்றவர்க்குத்‌ தெரிவித்து நிற்கும்‌. முல்லை இவ்வாறு அரும்பிப்‌ பூப்பது அவள்‌ பருவமடைந்ததன்‌ அறிவிப்பாயிற்று. முல்லை பூத்தால்‌ அக்கொடியை வாழ்த்துவது மரபு. அம்மரபு பூத்த மங்கையும்‌ பொலிக என வாழ்த்துவதாயிற்று. ‌ ‌ சீவகசிந்தாமணியின் பாடல் வரியொன்று இந்தச் செய்தியைத் தாங்கி நிற்கின்றது.

 ‘பவழம் கொள் கோடு நாட்டிப் பைம் பொனால் வேலி கோலித்

தவழ் கதிர் முத்தம் பாய்த்தித் தன்கையால் தீண்டி நன்னாள்

புகழ் கொடி நங்கை தன்பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை

அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ’ (சீவக 1268)

 அகழ் கடல் தானே வேந்தே - கடலனைய சேனையையுடை அரசே!; பவழம் கொள் கோடு நாட்டி - பவழத்தைக் கொள் கொம்பாக நட்டு; பைம் பொனால் வேலி கோலி - புதிய பொன்னால் வேலி வளைத்து; தவழ் கதிர் முத்தம் பாய்த்தி - பரவும் ஒளியையுடைய முத்துக்களை மணலாகப் பரப்பி; தன் கையால் தீண்டி - தன் கையாலே தீண்டி; நல்நாள் - நல்ல நாளிலே; புகழ் கொடி நங்கை தன் பேர் - புகழ் பெற்ற கொடி போலும் நங்கையாகிய திலோத்தமையின் பெயரை; பொறித்தது ஓர் கன்னி முல்லையாகிய முல்லை - இட்டு வளர்த்ததாகிய ஒரு கன்னியாகிய முல்லை; அணி எயிறு ஈன்றது - அழகிய முறுவல்போல அரும்பியது. (பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரை) 

கற்பு எனும் மணத்திற்கு, குடும்பமாய் வாழத் தலைப்பட்ட நாகரிகம் தொடங்கிய முல்லைத் திணையே தலையாதாக இருந்தது. அந் நிலத்தில் சிறந்திருந்த முல்லைப் பூவே கற்பு எனும் மணவாழ்வியலுக்குக் குறியீடானது. இதை, 

முல்லை சான்ற கற்பின் மெல்லியல் - சிறுபாணாற்றுப்படை 30

முல்லை சான்ற கற்பின்
மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே - நற்றிணை. 142

முல்லை சான்ற கற்பின்
மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே அகநானூறு. 274 போன்ற பாடல்கள் எடுத்துச் சொல்கின்றன.
 

இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து

எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய்

அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;

சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,

யாயும், ''அவனே'' என்னும்; யாமும்,   

''வல்லே வருக, வரைந்த நாள்!'' என,

நல் இறை மெல் விரல் கூப்பி,

இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! (தொல்கபிலர்-அகம் 282) மணம் குறித்த நாள் செய்யும் முறை தொடங்கப்பட்டுவிட்டதைத் தெரிவிக்கின்றது. 

எத்தனையோ மாற்றங்கள் வந்த போதும் மாந்த இனம் திருமணம் எனும் நிகழ்வை இன்னும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் வெவ்வேறு நடைமுறைகளில், தனித்தனியான வழக்கங்களோடு திருமணம் நடைபெறுகிறது. எல்லா இனக்குழுக்களிடையேயும் பொதுத்தன்மை உடையதாக, நீண்டகால உயிர்ப்புத் தன்மையுடையதாக, சமூக இருப்பின் உறுதிப்படுத்தலாக, நிலைத்திருப்பதன் சான்றாகத் திருமணங்கள் காட்சி தருகின்றன. இன்றைய காலகட்டத்தில் மிக வளர்ந்த நாடுகளில், கல்வியில் பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்ட மக்களிடையேயும், நெடிய வழக்கமுடைய இந்தக் குடும்ப அமைப்பு முறையைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் திருமணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.” (பல்லாயிரங்காலத்துப் பயிர் நூலிலிருந்து).

தமிழர்  நாகரிகத்தின் எல்லைக்கல்லாய், உற்பத்திப் பொருளாதாரத்தின் உளவியல் அடிக்கூறாய் முல்லை நிலத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தின் பெருங்குறியீடு முல்லை மலர் என்பது தெளிவு. 

செங்காந்தள் அல்லது கார்த்திகைப்பூ தமிழ்நாட்டின் மாநில மலராகவும். தமிழீழத்தின் தேசிய மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. அதுவே சிம்பாப்வே நாட்டின் தேசிய மலருமாகும். அதனாலேயே அதைப் பார்க்கும்போது அந்த மக்களுக்கு தன் நாட்டின் நினைப்பும் அதைத் தொடர்ந்த நாடு பற்றிய பல சிந்தனைகளும் தன்னியல்பாய் வரும்.  தேயத்தின் பொருட்டு உயிரீகம் செய்தார் பரும் அவர் தம் செய்கைகளும் நினைவுக்கு வரும். ஒரு தேயத்தின் குறியீடாகக் கருதப் பெறுபவை பெருமதிப்பு வாய்ந்தவை. அதனாலேயே ஒரு தேயத்தின், மண்ணின் மலர் அத்தனை மதிப்புள்ளதாகின்றது. 

அது மட்டுமா? 

தெய்வ வழிபாட்டின் போது

'நெல்லொடு நாழிகொண்ட நறுவீ முல்லை

அரும்பவிழ்‌ அலரிதூஉய்க்கை தொழுது, (முல்லைப்பாட்டு :8 -10) 

மாலைப் பொழுதில் வீடுகளில்

‘அகநகர்‌ எல்லாம்‌ அரும்பவிழ்‌ முல்லை

நிகர்மலர்‌ நெல்லொடு தூஉய்ப்‌

பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கம்‌ காட்டி’ (சிலப்-9: 1-3) 

மணம் நிகழும் போது தொடக்க நிகழ்வாக

‘நீரொடு பொலிந்த ஈரிதழ்‌ அலரி

பல்லிருங்‌ கூந்தல்‌ நெல்லொடு தயங்க

வதுவை நன்மணம்’‌ ... (அகம் 86) 

மணநாள் இரவில்

‘முல்லைப்‌ பல்போது உறழப்‌ பூநிரைத்து

மெல்லிதின்‌ விரித்த சேக்கை’. (நெடுநல்‌ : 130-31) 

பருவப் பெண் வைத்த முல்லை அரும்பிப் பூத்துப் பொலிவதை விழாவாகக் கொண்டாடிய நிகழ்வுகளிம் முல்லை நிலத்தில் உண்டு. மொத்தத்தில் முல்லையை வீட்டுப் பெண்ணாகவே, பெற்ற மகளாகவேப் பேணியது முல்லைத் திணை ஒழுக்கம். 

இப்படிப் பலவாறும் தமிழரின் வாழ்வியலில் கற்பு எனும் மணம் பற்றிய குறியீடான, சமூக நாகரிகத் தொடக்கக் குறியீடான முல்லை நிலமும் அதன் மலராகிய முல்லையும் “பாரி”க்கும் அவனது கால மாந்தருக்கும் அத்தனைப் பெறுமதி உடையதாய்த் தோன்றியிருக்க வேண்டும். 

கொடிகள் வளரும் இடங்களில் தமக்கானப் பற்றுக் கோடுகளைக் கண்டைந்து வளரும் என்பது காட்டு வாழ்வியலில் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இயல்பாகவே இன்று வரை மலைவாழ் பழங்குடிகள் பயிரியல், உயிரியல் அறிவு பெற்றவர்களாகவே காணப்படுகிறார்கள். அந்த உலக இயல்பு அறியாதவனல்ல பறம்பு மலைத் தலைவன் பாரி. அன்றியும், அவன் சிறந்த வீரன். குதிரைகளும் சிறந்த தேர்களும் கொண்டிருந்த பறம்பின் கோமான். இவையெல்லாம் செவ்விலக்கியப் பரப்பில் காணக்கிடைக்கின்றன. 

கூர்வேற் குவைஇய மொய்ம்பிற்

றேர்வண் பாரி” கபிலர் 

 தேர் வீசு இருக்கை, நெடியோன்” கபிலர் 

ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி” மதுரை நக்கீரனார்
 

வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்

உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்” ஔவையார் 

இவற்றைக் கருத்தில் கொண்டால் “போகிற வழியில் படரக் கொம்பில்லாமல் தவித்த முல்லைக் கொடிக்கு, தன் ஏறி வந்தத் தேரைக் கொடுத்துவிட்டு நடந்து…” என்ற கதைப் போக்கு அடிபட்டுப் போகும்.   

பாணரும் புலவரும் பரிசு பெற வேண்டி புகழ்ந்து சொல்வார். அவற்றில் இல்லாதனவும் காணக்கூடும். ஆனால் இந்த நிகழ்வைச் சொற்படமாக்கிய கபிலர் இரந்துண்ணும் நிலையில் பாரியிடத்து வந்தவரில்லை. அறிவை மதிக்கும் பாரியின் நண்பனாகவே மரிக்கும் வரை வாழ்ந்தவர். அதற்குப் பாரி மகளிருக்கு மணம் முடித்து வைக்க அவர் பட்ட பாடுகளே சான்று.  இங்கே, ஒன்றை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. முல்லை நிலத்தில் முகிழ்த்த மணம் எனும் குடும்பச் செயற்பாடு தான் அது. முல்லைக்கும், மணத்திற்கும் அத்துணைச் சிறப்புத் தன்மை இருந்த காரணத்தானே கபிலர் பாரி மகளிர் தம் மகளிர் எனச் சொல்லி மணம் முடிக்க அலைகின்றார். 

பறம்பின் கோமான்

நெடு மாப் பாரி மகளிர்; யானே

தந்தை தோழன்; இவர் என் மகளிர்” - கபிலர் 

இப்படியான கபிலரே பாரி தேரீந்த நிகழ்வைச் சொல்கிறார். 

இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர் (புறம்200) கபிலர்.
 

நாத்தழும்பு இருப்பப்(நாத்தழும்பேறுதல்) - பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் -: திரும்பத் திரும்ப தன்னைப் புகழ்ந்து பாடாது எனத்தெரிந்தும் பாரி முல்லைக்குத் தேரை ஈந்தான் என்கிறார். புகழ்ச்சியில் கபிலருக்கும் பெரிய விருப்பமில்லை என்ரே தெரிகின்றது. பல புலவர்கள் பிற்காலத்தில் கபிலரைப் பொய்யில் கபிலர் என்று கூறுவதும் கவனிக்கத் தக்கது. 

பிந்தைய சிறுபாணாற்றுப்படை

சுரும்பு உண

நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்

சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்

பறம்பின் கோமான், பாரியும்; - என்று சொல்கின்றது. 

இயல்பைத் தேடுவோம். 

கிராமப் புறங்களில் கோவில் தேர் நிறுத்தப்பட்டு இருக்கிற இடங்களைக் காணலாம். குமரிப் பகுதியில் அது “தேர்மூடு” என்ற சொல்லால் பயிலப்படும். வேப்பமூடு, மாமூடு போன்று. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே பயன்படுத்தப் படுவதால் இந்தத் தேர்மூட்டில்  செடி, கொடிவகைகள் வளரும். அவை தேர் மீதும் படர்ந்து வளர்வதைக் காணலாம். திருவிழாக் காலத்தில் தேர் பயன்பாட்டிற்காக அந்தக் கொடிகளை அறுத்து எறிந்து தூய்மை செய்வர். 

பல தேர்களை உடைய பாரியின் ஏதோ ஒரு தேர் பயன்படுத்தப் படாமல் சில மாதங்கள் நின்றிருக்கலாம். தேரை நிறுத்தி இருக்கிற இடத்தில், கார் காலத்தில் விரைந்து வளரும் முல்லைக்கொடி தேரைப் பற்றி படர்ந்து அடர்ந்து வளர்ந்திருக்கலாம். செழித்துப் பூத்துக் கிடந்திருக்கலாம். 

அந்தத் தேரை என்றேனும் ஒருநாள் பயன்படுத்த எண்ணும் வேளையில் முல்லை வளர்ந்தது அவன் கண்ணில் படுகின்றது. தேரை நகர்த்த வேண்டுமென்றால் பருவத்தே பூத்துக் குலுங்கும், ஆயர் குல மக்களின் பெண்மக்களாய்க் கருதப்பெறும் சிறப்பு கொண்ட, முல்லை நிலத்தின் பெருங்குறியீடான முல்லைக்கொடியை முற்றிலும் அழித்தாலன்றி நகர்த்துவதற்கு வேறு வழி இல்லை. 

பல தேர்கள் கொண்ட தேர்வண் பாரியாக, மாரியைப் போல் வள்ளன்மை கொண்ட பாரியாக, பல்லுயிரும் பேணி அன்பு செலுத்தும் பழங்குடித் தலைவனாக, தமிழர் குடும்ப நாகரிகத்தின் தலை நிகழ்வை நிகழ்த்தியிருந்த முல்லை நிலப் பெருமகனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்களோ அதைத் தான் பறம்பின் கோமான் பாரியும் செய்தான். 

ஆம். முல்லை செழித்துக் கிடந்த அந்தத் தேரை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு தேரை எடுத்துகொண்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டான். 

கால ஓட்டத்தில் பல கதைகள் வந்தன. கள்ளுண்ட மயக்கத்தில் பாரி செய்த முட்டாள்தனமான செய்கை என்று சொல்பவரும் உண்டு. நிறையப் பரிசு வேண்டி புலவர் மிகைப் படுத்திச் சொன்னது என்பாரும் உண்டு. ஒரு கொம்பை நட்டுவிட்டுப் போயிருக்கலாம், இது வீண் வேலை என்று பாரிக்கு அறிவுரை சொல்வோர் உண்டு. 

அரசுகளே ஆறுகளை அழிப்பதையும், மலைகளை  உடைத்து எடுப்பதையும், கடல் வளம் சுரண்டுவதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாழும் திணை வாழ்க்கை மறந்து போன நமக்கு இயற்கை செறிந்த வாழ்வியல் கொண்ட பாரியை விளங்கிக்கொள்ள இயலுமா? தம் மரபை உயிராய்ப் பேணிய அவன் மனம் விளங்குமா? 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” - என்று நம் பாட்டன் உலகுக்குச் சொன்ன பாடத்தை நினைவிலேனும் வைத்திருக்கிறோமா?

09-03-2025

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்