Tuesday, 11 March 2025

இளையராசா பல்லியப் பெருமழை


இசைச்சிறகு அசைத்தசைத்து
இமயச்சிமை கடந்த
இசைச் செருக்கால்,

அன்னக்கிளி தொடங்கி
ஐரோப்பிய இசைமன்றம் வரை,
நுழையும் இடங்களில் எல்லாம்
விதிகளை மாற்றுகிறாய்.

அந்தப்
பல்லியப் பெருமழை நடுவே
உன் குரலில்
மெல்லென நுழைந்த
“இதயம் போகுதே”
எமைச் சில்லிடச் செய்துவிட,

அல்லவை ஒதுக்கி உனை
அள்ளி முகர்ந்திட்டோம்.

நீ,
எம் மண்ணின் குழந்தை!
எம் மக்களின் இறுமாப்பு!

ஆண்டவன் முன்னே
நெடுஞ்சாண் கிடக்கை
இசைகேட்டு மகிழ்ந்தவர் முன்
கூப்பித் தொழுதகை.

கண்களில் தெரிந்தன
கனிவும் நன்றியும்.
முகத்தில் தெரிந்தது;
எங்கள்
மொத்தப் பெருமிதம்.

வாழி நீ! வாழி! வாழி!! 



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்